பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் இன்றும் (24) நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் பதிலை எதிர்பார்த்து கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பையினால் பல கேள்விகள் சபையில் முன்வைக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் 72ஆவது அமர்வு இன்று (24) காலை 9.30மணிக்கு தவிசாளரின் தலைமையின் கீழ் நடைபெறவுள்ளது.
இதன்போது எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பையினால் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள் சபையில் முன்வைக்கப்படவுள்ளது.
பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயத்தை நிறுவுவதற்காக கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரதியை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சபைக்கு சமர்பித்து அதன் விபரத்தை தெரிவிப்பாரா?
பொத்துவில் பிரதேசதிற்கான தனியான கல்வி வலயப் பிரிவில் நிருவகிக்கப்படவுள்ள பாடசாலைகளின் விபரங்களை சபைக்கு தெரிவிக்க முடியுமா?
கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் நிறுவுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இது வரை பொத்துவில் பிரதேசத்திற்கான கல்வி வலயம் நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விபரங்களை சபைக்கு தெரிவிக்க முடியுமா?
பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயத்தினை அமைப்பதற்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிபாரிசு மத்திய அரசாங்க கல்வி அமைச்சுக்கு அனுப்பபட்டுள்ளதா? அப்படியாயின் அதன் விபரத்தை சபைக்கு தெரிவிக்க முடியுமா?
அன்மையில் பொத்துவில் பிரதேசத்தில் மத்திய அரசாங்க கல்வி இராஜங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்னன் கலந்து கொண்ட நிகழ்வொன்றின் போது சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம்; பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தமிழ் கூட்டமைப்பினர் விரும்பாதவரை ஒரு போதும் கிடைக்காது எனக்குறிப்பிட்டார்.
இது தொடர்பான நிலைப்பாட்டினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சபைக்கு தெரிவிப்பாரா? எனவும் உதுமாலெப்பை கல்வி அமைச்சரின் பதிலை எதிர்பார்த்து பல கேள்விகளைக் கேட்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.