நமது நாட்டைப்பொருத்தவரையில் கலை இலக்கியத்துறையில் இளைஞர்களின் ஆர்வம் மிகவும் குறைந்துகொண்டே செல்கின்றது, இதற்கு இன்றைய நவீன உலகமும் நவீன சாதனங்களும் பிரதான காரணம் எனலாம்.
இருப்பினும் இத்தகைய சவால்களை தாண்டி கலை இலக்கியத்துறையில் முன்னேறிச்செல்வது சாதாரண விடயமல்ல,அத்தனை தடைகளையும் தாண்டி தனது 18 ஆவது வயதில் ஒரு வருடத்தினுள் இரண்டு புத்தகங்களை கலையுலகிற்கு பிரசவித்திருக்கின்றார் இளம் கவிஞர் பொத்துவில் அஜ்மல்கான்.
இவரின் இந்த வளர்ச்சியின் பின்னால் தனது தாய் இருப்பதாக கூறும் அஜ்மல்கானின் ஊரான பொத்துவிலும் ஒரு காரணமாக இருக்கும் என்பது எனது கருத்து .
கலை இலக்கியத்துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் சாதனையாளர்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் பொத்துவிலில் பிறந்த இவர் தனது சிறு வயதிலேயே கவிதைகளை எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் .
ஒரு மனிதன் தனது சிறு வயது முதல் பட்ட கஷ்டங்களையும் வேதனைகளையும் கவி வரிகளாக சமூகத்திடம் ஒப்படைக்கும் திறன் எல்லோருக்கும் அமைவதில்லை, சிறிது சிறிதாக சிதறிய தனது கவித்துளிகளை ஒன்று சேர்த்து "சிதறிய சிறுதுளிகள்" எனும் தனது முதல் படைப்பை கடந்த 2016-01-10 அன்று பசரிச்சேனை அல் இஸ்ராக் வித்தியாலயத்தில் கலை நேசர்களுக்காக வெளியிட்ட இவர் குறுகிய காலத்தினுள் தனது இரண்டாவது படைப்பான காதல் உணர்வுகளை சுமந்து வரும் "காதல் பித்தனின் கிறுக்கல்" எனும் நூலை கடந்த 2016-10-16 அன்று பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் வெளியிட்டார்.
குறித்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ALM. நசீர் பொத்துவில் பிரதேச செயலாளர்,பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்,பொத்துவில் பிரதேச சபையின்முன்னாள் உறுப்பினர்கள் கல்வி மாண்கள் இலக்கியத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அஜ்மல்கான் தற்போது தனது மூன்றாவது படைப்பு "களவு போன காகிதம்" தயாராகி வருவதாகவும் வைரமுத்து போன்று சிறந்த கவிஞர் ஆவதே தனது லட்சியம் எனவும் தெரிவித்தார் .
இவருக்கு நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.
-கபூர் நிப்றாஸ்-