மாற்றத்திற்கான அறைகூவல்.

imthiyasபொத்துவில் மக்களின் உரிமைக்கான குரல் தொடர்ந்தும் கல்வி, பாதுகாப்பு, விவசாயம், வியாபாரம், வேலைவாய்ப்பு, காணி, போக்குவரத்து, மருத்துவம், மீன்பிடி, மைதானம் என்று ஒலித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் அந்த உரிமைகளும் அதனை பெற்றுக் கொள்வதற்கான அதிகாரமும் ஆளுமையும் மிக்க பிரதிநிதித்துவமும் தொடர்ச்சியாக மழுங்கடிக்கப் பட்டு வருவதே வரலாறு.

இந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவே பொத்துவில் மக்கள் தங்களது வாக்குகளை முஸ்லிம் தேசிய கட்சிகளுக்கு தொடர்ச்சியாக வழங்கி பிரதேச சபை, மாகான சபை மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகளின் தெரிவுக்கு பெரும் பங்காற்றி வருகின்ற போதிலும் இவர்களது உரிமைகளை இன்றுவரை வென்றெடுக்க முடியாமல் போனதன் பின்னணி இவர்கள் தெரிவு செய்த தலைவர்களினதும் தேசிய கட்சிகளினதும் தோல்வியை பறைசாற்றுகின்றன.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் எமது பிரதேச சபையில் நாம் தெரிவு செய்த பிரதிநிதிகள் மூலம் இதுவரை எத்துனை பிரேரணைகள் முன் வைக்கப் பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளன??

இந்தப் பிரச்சினைகள் சார்பாக எமது கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் மூலம் இதுவரை எத்துனை பிரேரணைகள் முன் கொண்டு செல்லப்பட்டுள்ளன??

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் எமது நாடாளுமன்றத்தில் நாம் தெரிவு செய்த பிரதிநிதிகள் மூலம் இதுவரை எத்துனை பிரேரணைகள் முன்வைக்கப் பட்டுள்ளன??

இந்த முஸ்லிம் தேசிய கட்சிகளின் மூலம் எமது மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் சென்ற உறுப்பினர்கள் எத்துனை நிமிடங்கள் இதுவரை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தி இருக்கின்றார்கள்??

இவர்கள் எமது சமூகம் எதிர் கொள்ளும் எந்தப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கின்றார்கள்??

இதில் எதுவும் செய்யவில்லை எனில் எதற்க்காக நாம்இவர்களுக்கு வாக்களித்தோம்??

பாராளுமன்ற தர வரிசையில் இவர்களது நிலைகள்தான் என்ன?? (ஒரு நபர் 203ம் இடம் மற்றயவர் 216ம் இடம்), வினைத்திறன் குன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலிலேயே இவர்களது பெயர்கள் காணப்படுகின்றன அவ்வாறெனில், எமது கடந்த கால தெரிவுகள் சரிதானா??

நாம் அறிவு பூர்வமான முறையில் தான் இந்த தெரிவுகளை மேற்கொண்டோமா??

எமது வாக்குகளை நாம் திறன் குன்றிய பிரதிநிதிகளுக்குதானா மீண்டும் மீண்டும் வழங்கப் போகின்றோம்??

இந்த அரசியல் பிரதிநிதிகள் அபிவிருத்தி என்ற பெயரில் மண் வெட்டி வழங்குதல், சட்டி பானை முட்டி வழங்குதல், கிருமி நாசினி தெளிக்கும் பம்ப் வழங்குதல் மற்றும் தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வழங்கி அதைப் புகைப் படம் பிடித்து சமூகத் தளங்களில் தங்களை பொருளாதார நிபுணர்களாக காண்பிக்கின்றனர்.

அரசியல், சட்டம், சமூக நடைமுறை, பொருளாதாரம் பற்றி அறிந்து இருக்கக் கூடிய, புத்தி ஜீவிகளும்,

அபிவிருத்தி பற்றி தூரப் பார்வை உடைய சிந்தனையாளர்களும் எமது ஊரினதும், சமூகத்தினதும் அடையாளங்களாகவும், பிரதிநிதிகளாகவும் தெரிவு செய்யப் படல் வேண்டும், இந்த அபிவிருத்தி என்பது ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்படுத்தப் படல் வேண்டும்.

தேசிய பாடசாலைகளையும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களையும் எமதூருக்கு கொண்டுவர வேண்டும், அதன் மூலம் எமது குழந்தைகளுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் சிறந்த கல்வி புகட்டப்படல் வேண்டும், அதன் மூலம் அவர்கள் சிறந்த கல்விமான்களாக மாற வேண்டும், சிந்தனையில் உயர்ந்திருக்க வேண்டும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும், சமூக அந்தஸ்தில் உயர வேண்டும், அவர்களது வாழ்க்கை தரத்தில் உயர்ச்சி வேண்டும் இதுதான் அபிவிருத்தி.

முஸ்லிம் தேசிய கட்சிகளிடமும், தலைவர்களிடமும் எமது பொத்துவில் சமூகத்தின் உரிமைக் குரல் தொடர்ந்தும் நசுக்கப் படுவதற்கான காரணங்களாக நான் இரண்டு விடயங்களை கண்டரிந்துள்ளேன் முதலாவதாக எமது உள்ளூர் அரசியல் பிரதிநிதிகளிடம் ஆளுமை, ஒற்றுமை, பரஸ்பரம், நம்பிக்கை மற்றும் சமூக சிந்தனை இன்மையும் குறுகிய அரசியல் பார்வையும்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆரோக்கியமான முடிவு ஒன்றை எட்ட வேண்டுமாக இருந்தால் பிரதிநிதிகளிடம் ஆளுமை விருத்தியும், சமூக உணர்வும், பதவிகளுக்கான விட்டுக்கொடுப்பும் இன்றி அமையாததாக காணப் படுகின்றன.

இன்றைய பொத்துவில் அரசியல் களத்தில் இவ்வாறான பண்புகளைக் கொண்ட அரசியல் முதிர்ச்சி கொண்ட எந்த ஒரு அரசியல் பிரதிநிதியையும் கண்டுகொள்வது கடினமாகவே உள்ளது.

இரண்டாவதாக எமது ஊருக்குக்கென துறை சார் நிபுணத்துவம் கொண்ட ஒரு சமூக நல அமைப்பு ஊரின் பிரதிநிதிகள் தெரிவில் பங்கு கொள்ளாமையாகும்.

இதற்க்கான காரணங்களாக முஸ்லிம் தேசிய அரசியல் கட்சிகள் தமக்கு வேண்டியவர்களை மாத்திரம் அவர்களது ஆளுமைகளை கருத்தில் கொள்ளாது வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதும், அவ்வாறு தெரிவு செய்யப் படக்கூடிய பிரதிநிதிகள் ஆளுமை நிறைந்த அமைப்பொன்றுஉருவாக்கத்தில் அக்கறை காட்டாமயுமாகும்.

குறிப்பிட்ட சில உள்ளூர் அரசியல் வாதிகள் அற்ப சில சலுகைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக எமது பொத்துவிலூர் அதற்கான விலையாக பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டி உள்ளது.

இந்த நிலையில் மாற்றம் வேண்டும், ஆளுமை மிக்க தலைவர்களை மாத்திரம் இந்தப் பொத்துவிலூர் தமது பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு தெரிவுசெய்ய வேண்டும், அதற்காக எமது மண்ணில் துறை சார் நிபுணத்துவம் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படல் வேண்டும்.

இந்த துறை சார் நிபுணத்துவ குழுவில் கல்விமான்கள், புத்தி ஜீவிகள், உலமாக்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என்று அணைத்து வகுப்பினர்களினதும் பங்களிப்பு வேண்டும், இந்த அமைப்பு சுதந்திரமாக செயற்பட வேண்டும், இந்த அமைப்பின் மூலம் எதிர்காலத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் அடையாளப் படுத்தப் பட்டு, முஸ்லிம் தேசிய கட்சிகளோடு பேரம் பேசல்களை மேற்கொண்டு எமதூருக்கான பிரதிநிதிகளை வென்றெடுக்க வேண்டும்.

தலைவருக்காக மக்கள் என்ற நிலை மாறி மக்களுக்காக தலைவர் என்ற கோசம் முழங்க வேண்டும்,

இதுவே எமது மாற்றத்திற்கான அறைகூவல்.

இம்தியாஸ் சலீம்.

தொடரும்